புதன், 24 ஆகஸ்ட், 2011

காபி வித் கணினி

ப்ளாகர் தளத்துக்குச் செல்ல இரண்டு விதமான இணைய முகவரி உண்டு. www.blogspot.com அல்லது www.blogger.com இந்த இரண்டில் எதை உங்கள் அட்ரஸ் பாரில் தட்டச்சு செய்தாலும் ப்ளாக்கர் தளம் திறக்கும். ஒரே இணைய தளத்துக்கு எதற்காக இரண்டு முகவரி என்கிறீர்களா? அதற்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் உள்ளது.
ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்கள் என்ன மாதிரியான இணைய தளங்களைப் பார்க்கலாம் பார்க்கக் கூடாது என்று ஒரு இணைய தணிக்கைக் கொள்கையை வகுத்துக் கொள்ளும். அந்தக் கொள்கைகளுக்கேற்ப ஒரு இணைய நெருப்புச் சுவரை(firewall) தகுந்த நிபுணர்களைக் கொண்டு வடிவமைக்கும். உதாரணத்துக்கு பாலுறவு என்பதைப் பற்றி தன் நாட்டு மக்கள் இணையம் மூலம் தெரிந்து கொள்ள வேண்டாம் என்று அவர்கள் நினைத்தால், ‘sex’ என்ற வார்த்தை அந்த இணைய தளத்தில் இடம்பெற்றிருந்தாலும் அதைத் தடுத்து விடு என்ற கட்டளையை அவர்கள் தங்கள் சர்வர்களுக்கு பிறப்பித்திருப்பார்கள். ஆக, அந்த வார்த்தை ஒரு மருத்துவக் கட்டுரையில் இடம் பெற்றிருந்தாலும் கூட அந்தக் குறிப்பிட்ட நாட்டில் அது திறக்காது. இந்த ஒற்றை வார்த்தையை மட்டுமல்ல.. இன்னும் அந்தரங்க உறுப்புகளைக் குறிக்கும் ஆயிரக்கணக்கான சொற்களையும் இந்தப் பட்டியலில் அவர்கள் சேர்த்துவிட்டிருப்பார்கள். இதனால், தப்பான இணைய தளங்களில் இருந்து இளம் பிராயத்தினரைக் காக்கலாம்.
சரி.. இதற்கும் ப்ளாக்கர்ஸ் தளத்துக்கு இரண்டு முகவரி இருப்பதற்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா? ஆரம்பத்தில் ப்ளாக்கர்ஸ் தளம் ப்ளாக்ஸ்பாட் என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது. www.blogspot.com என்ற முகவரி மட்டும்தான் பயன்பாட்டிலும் இருந்தது. ஆனால், அந்தத் தளம் சீனா உள்ளிட்ட சில நாடுகளின் ‘நெருப்புச் சுவர்’களால் தடுக்கப்பட்டு விட்டது. தப்பான தளங்கள்தானே தடுக்கப்பட வேண்டும்.. இது ஏன் தடுக்கப்படுகிறது என்று சிந்தித்தபோதுதான் அந்தப் பெயரில் உள்ள ஒரு வில்லங்கம் பலருக்கும் உறைத்தது. ஆம், blogspot என்ற சொல்லில் வருகிற 'gspot' என்பது மிக மோசமான அர்த்தத்தில் அந்தரங்க உறுப்பு தொடர்பான உடற்கூற்றியலில் பயன்படுத்தப்படும் வார்த்தை. இந்த வார்த்தையைத் தாங்கி வரும் தளங்களை எல்லாம் தடுக்கச் சொல்லி, நெருப்புச் சுவர்கள் உருவாக்கப்படுவதால் ப்ளாக்ஸ்பாட்டும் தடுக்கப்பட்டது. இதை உணர்ந்துதான் ப்ளாக்கர் என்பதையே பிரதான முகவரியாக பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டது கூகுள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக